அத்திகளத்தில் கொள்ளை- காவல்துறையினர் விசாரணை

அத்திகளத்தில் கொள்ளை- காவல்துறையினர் விசாரணை
கொள்ளை
திருப்பூர் மாவட்டம், அத்திக்களம் தொழிலதிபர் மற்றும் டிரைவர் வீடுகளில் கூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உடுமலை சாலை அத்திக்களம் பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ் (வயது 31). இவர் ஸ்டீல் கம்பெனி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு அவரது அம்மா கலாவதி மற்றும் மனைவி பிருந்தா ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். பிறகு கோவையில் இருந்து மதியம் தாராபுரம் அத்திக்களம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஹாலில் வைத்திருந்த 45,இன்ச் எல்.இ.டி டிவி மற்றும் 90, ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது.

மேலும் அதிர்ந்து போன அவர் பெட்ரூமில் இருந்த பீரோக்களை சென்று பார்த்தார் அப்போது மூன்று பீரோக்களை திறந்து பீரோவில் வைத்திருந்த 5000, ரொக்க பணத்தையும் திருடிக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றது தெரிய வந்தது. .இதேபோன்று:- தளவாய்பட்டிணம் ஊராட்சி சரவணாநகர் பாப்பையன்புதூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் வி.சாமிநாதன். இவரது மனைவி தனலட்சுமி இவர்கள் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு உடுமலைப்பேட்டை சென்றிருந்தனர்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த 20000-ம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். இரண்டு இடங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்த புகாரின் பேரில் அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இது குறித்து உடமைகளை பறி கொடுத்த காளிதாஸ் தெரிவிக்கையில் தாராபுரம் உடுமலை சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் மேலும் கொள்ளை போன பொருட்களை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இரு வேறு இடங்களில் தொடர்ந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story