முதியவர் கண்களில் மிளகாய் பொடி தூவி கொள்ளை

முதியவர் கண்களில் மிளகாய் பொடி தூவி கொள்ளை
பைல் படம்
பூதபாண்டி அருகே நள்ளிரவில் முதியவர் கண்களில் மிளகாய் பொடி தூவி குடும்பத்தினரை தாக்கி ரூ.35 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே நாவல் காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அழகிய பாண்டி புரத்தை சேர்ந்த கிருஷ்ணன் குட்டி (65) அவரது மனைவி நிர்மலா (60) மகன் சுரேஷ் ஆகியோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். மூன்று பேரும் அதே தோட்டத்தில் கட்டப்பட்ட வீட்டில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் கிருஷ்ணன் குட்டி இயற்கை உபாதை கழிப்பதற்காக கதவை திறந்து வெளியே வந்தார்.

அப்போது மறைந்திருந்த இரண்டு கொள்ளையர்கள் கிருஷ்ணன் குட்டி கண்களில் மிளகாய் பொடியை தூவி வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த நிர்மலா மற்றும் சுரேஷை சரமாரியாக அடித்து உதைத்து விட்டு பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதில் சுரேஷை கொள்ளையர்கள் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவருக்கு கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. பின்னர் கொள்ளையர்கள் வீட்டிலிருந்து ரூ.. 35 ஆயிரம் ரொக்கம், இரண்டு குத்துவிளக்குகளை சுருட்டிக்கொண்டு, வீட்டில் இருந்த பொருட்ககளை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மூன்று பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் உள்ளதா? அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story