ஓடும் ரெயிலில் மூதாட்டியை கத்தியால் வெட்டி கொள்ளை - வாலிபருக்கு வலை

ஓடும் ரெயிலில் மூதாட்டியை கத்தியால் வெட்டி கொள்ளை - வாலிபருக்கு வலை

காயமடைந்த மூதாட்டிக்கு சிகிச்சை 

அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை,பணம் கொள்ளையடித்து சென்ற வாலிபரை அரக்கோணம் ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் மேற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமி (69). இவர் இன்று அதிகாலை அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயிலில் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன் கோயில்களை தரிசனம் செய்வதற்காக காஞ்சிபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார் . ரயில் தக்கோலம் ரயில் நிலையம் அருகில் செல்லும் போது திடீரென 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி லட்சுமி அணிந்திருந்த அரை சவரன் கம்மலை கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் வலது கை மணிக்கட்டில் கத்தியால் வெட்டினார். இதில் பயந்து போன லட்சுமி தான் அணிந்திருந்த அரை சவரன் கம்மல் மற்றும் ரொக்கம் ரூபாய் 1,100 அவரிடம் தந்துள்ளார். கொள்ளையன் ரயில் தக்கோலம் ஸ்டேஷன் வரும்போது கீழே குதித்து தப்பி ஓடிவிட்டான். காயமடைந்த லட்சுமி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லட்சுமிக்கு கையில் 8 தையல்கள் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களில் பெண் துணை பி.டி.ஓ உட்பட 3 பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை ,பணம் கொள்ளை அடித்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இதுவரை அரக்கோணம் ரயில்வே போலீசார் யாரையும் கைது செய்யவில்லை. குறிப்பாக செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு எல்லை பிரச்சனையால் குற்றவாளிகளை கைது செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. இரவு நேரங்களில் நடந்து வந்த கொள்ளை சம்பவம் இன்று அதிகாலை நேரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story