முகத்தில் மிளகாய்பொடி தூவி ரூ.1 லட்சம் கொள்ளை
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இசலி பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு டாஸ்மாக் கடையில் சுள்ளங்குடி பகுதியைச் சேர்ந்த சங்கிலி என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல இரவு 10 மணியளவில் பணிமுடிந்த நிலையில் விற்பனையாளர் சங்கிலி டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு மதுபான விற்பனை தொகையான ரூ.1 லட்சத்து 3000 ரூபாயை மறுநாள் வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது டாஸ்மாக் ஊழியர் சங்கிலி இசலி - நரிக்குடி செல்லும் சாலையில் இருவர்குளம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் டாஸ்மாக் ஊழியர் சங்கிலியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவிய நிலையில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடமிருந்த ரூ. 1 இலட்சத்து 3000 பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர் சங்கிலி இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து செல்போன் மூலம் நரிக்குடி காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தார். இதனையடுத்து திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன் உத்தரவின் பேரில் நரிக்குடி இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், திருச்சுழி இன்ஸ்பெக்டர் மணிகண்டன், திருச்சுழி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமாராணி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவசக்தி என்ற நபரை போலீசார் சிவகங்கை மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து பல்சர் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய இசலி பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி ராஜாராம், திரு மாணிக்கனேந்தல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (என்ற) சதீஷ் ஆகிய நபர்களையும் நரிக்குடி போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி ராஜாராம் உள்ளிட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் அவர்களை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.