வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது - வழுக்கி விழுந்ததில் கை முறிவு
கைது செய்யப்பட்ட காத்தான் என்ற கார்லின்
தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த மாரிக்குமார் (33) என்பவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கடையின் சரக்கு வாகனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று சரக்கு வாகனத்தில் தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, தாக்கி அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மாரிக்குமார் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி உத்தரவின்படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த காத்தான் என்ற கார்லின் (24) தனது கூட்டாளியுடன் சேர்ந்து மாரிக்குமாரை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த ரொக்க பணம் ரூ.9,400ஐ பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் உடனடியாக 24 மணிநேரத்தில் கார்லினை கைது செய்து, அவரிடமிருந்த பணம் 3160யும் பறிமுதல் செய்தனர். பின் அவரிடம் விசாரணையில் பணப்பறிப்பில் ஈடுபட்டதும், அதன் பிறகு யாரிடமும் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க தங்களது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது சாலையிலிருந்த வேகத்தடையில் தடுமாறி சறுக்கி கீழே விழுந்ததில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.