3 நாட்கள் ரோப்கார் இயக்கப்படாது: நரசிம்மர் கோவில் நிர்வாகம் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ள பெரிய மலையில் யோக நரசிம்மர் கோவில் உள்ளது. நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்றால் 1,305 படிகள் ஏறி செல்ல வேண்டும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நரசிம்மரை தரிசனம் செய்து செல்கின்றனர்
.முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டுகள் வழியாக சென்று தரிசனம் செய்ய முடியாமல் சீரமப்பட்டனர். இதனால் கடந்த 2010-ம் ஆண்டு ரோப் கார் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோப்கார் சேவையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.
ஒரு நாளைக்கு 900 முதல் 1,000 பேர் வரை ரோப்காரில் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்தநிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 3 நாட்கள் ரோப்கார் இயக்கப்பட மாட்டாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.