கன்னியாகுமரியில் ரவுடிகள் அதிரடி கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் தற்போது ரவுடி பட்டியல்களில் உள்ள சிலர் தகராறு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதாக மாவட்ட எஸ்பி சுந்தரவதனத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். அதன் படி நேற்று கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த கான்ஸ்டீன் ராபின் என்ற லாக்ஸ் (23) கன்னியாகுமரி சுனாமி காலனி பகுதியை சேர்ந்த ஜெப்ரின் (22) ஆகியோரை கன்னியாகுமரி போலீசார் கைது செய்துள்ளனர். வர்கள் மாதவபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை வெட்டி கொல்ல முயன்றதாக கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதானவர்கள் மீது ஏற்கனவே ஏராளமான வழக்குகள் உள்ளன. காவல்துறையின் ரவுடிகள் பட்டியலில் இவர்கள் உள்ளனர். இதில் கைதான கான்ஸ்டீன் பி பிரிவிலும், ஜெப்ரின் சி பிரிவிலும் உள்ளனர். இவர்களின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். தொடர்ந்து ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.