உதவி பேராசிரியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி

உதவி பேராசிரியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி

மோசடி 

தனியார் கல்லூரி உதவி பேராசிரியரிடம் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி பணம் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம்,காட்பாடி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய வாட்ஸ்-அப் எண்ணிற்கு கடந்த பிப்ரவரி மாதம் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து உதவி பேராசிரியர் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது கூகுள்மேப்பில் உள்ள ஓட்டல்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் செய்து அதனை ஸ்கீரின்ஷாட் எடுத்து அனுப்பினால் கமிஷன் கிடைக்கும் என்று மர்மநபர் கூறி உள்ளார்.

அதன்பேரில் அவர் மர்மநபர் அனுப்பிய ஓட்டல்களுக்கு ரேட்டிங் கொடுத்து சிறிய தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து மர்மநபர் ஆன்லைனில் பணம் முதலீடு செய்து டாஸ்குகளை முடித்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என்று கூறி ஒரு லிங்க் அனுப்பினார்.

அதனை உண்மை என்று நம்பிய உதவிபேராசிரியர் அந்த லிங்கில் உள்ள டாஸ்குகளை ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் செலுத்தி முடித்தார். பின்னர் அந்த லிங்கில் காண்பித்த பணத்தை எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை.இதுகுறித்து உதவிபேராசிரியர் விசாரித்தபோது தான் ஆன்லைனில் பகுதிநேர வேலை என்று கூறி ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்தை மர்மநபர் மோசடி செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story