நாமக்கல் பைபாஸ் ரோட்டிற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ரூ.100 கோடி இழப்பீடு - இராஜேஸ்குமார் M.P தகவல்
நாமக்கல் பைபாஸ் ரோட்டிற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ரூ.100 கோடி இழப்பீடு - இராஜேஸ்குமார் M.P தகவல்
நாமக்கல் புதிய பஸ் நிலையம் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு, 3ம் கட்டப்பணிகள் துவக்க விழா இன்று (மார்ச் -4) திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு முதலைப்பட்டியில் நடைபெறுகிறது. இதில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துக்கொள்கிறார்.
நாமக்கல் புதிய பை பாஸ் ரோடு அமைக்கும் பணிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு, இதுவரை ரூ. 100 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார் எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், நாமக்கல் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் முதலைப்பட்டி அருகில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கவும், புதிய பை பாஸ் ரோடு அமைக்கவும், தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டு, நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நாமக்கல் புதிய பை பாஸ் ரோடு, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி அருகில் இருந்து, பரமத்தி ரோட்டில் வள்ளிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில் மொத்தம் 22.387 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதில் முதலைப்பட்டி அருகே அமையும், புதிய பஸ் நிலையத்திற்கு இணைப்புச் சாலை அமைக்கப்படுகிறது. புதிய பைபாஸ் ரோடு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் 4 மாநில நெடுஞ்சாலைகளையும் இணைத்து செல்கிறது. பெங்களூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை செல்லும் வாகனங்கள் அனைத்தும், நாமக்கல் நகருக்குள் செல்லாமல் இனி புதிய பை பாஸ் ரோடு மூலம் செல்லலாம். மேலும், துறையூர், பெரம்பலூர், கண்ணனூரில் இருந்து சேலம், ஈரோடு, கோவை செல்லும் வாகனங்கள் நாமக்கல் நகருக்குள் வராமல் புதிய பை பாஸ் ரோடு வழியாக செல்லலாம். இதனால் நாமக்கல் நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இனி குறையும். ஆஞ்சநேயர் கோயிலுக்கு வருபவர்களும், பல்வேறு பணிகளுக்காக நாமக்கல் நகருக்குள் வந்து செல்பவர்களும் இனி எளிதாக வந்து செல்ல முடியும். புதிய பைபாஸ் சாலை அமைப்பதற்காக 2012ம் ஆண்டில் ரூ. 10.70 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, 2019ம் ஆண்டு ரூ. 87 கோடிக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்று வந்தது. பை பாஸ் ரோடு பணிக்காக 11 கிராமங்களில் மொத்தம் 134.24 (57.97 ஹெக்டர்) ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும், 33.29 ஏக்கர் நிலம் நிலமாற்றம் செய்யப்படவும் உள்ளது. இதுவரை மொத்தம் 48.30 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நில உரிமையாளர்களுக்கு சுமார் ரூ. 100 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது முதலைப்பட்டியில் இருந்து திருச்சி ரோடு வரை, 3 கட்டங்களாக பைபாஸ் ரோடு அமைப்பதற்காக, சிஆர்ஐடிபி திட்டத்தின்கீழ் 12 கி.மீ நீளத்திற்கு, ரூ. 184 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் முதலைப்பட்டி, முதலைப்பட்டிப்புதூர், செல்லிபாளையம், மரூர்ப்பட்டி, செம்பாறைப்புதூர், விட்டமநாய்க்கன்பட்டி, வீசானம், வேட்டாம்பாடி, முத்துகாப்பட்டி, சிவியாம்பாளையம், கூலிப்பட்டி, ரெட்டிப்பட்டி, பொம்மசமுத்திர அக்ரஹாரம், வேப்பநத்தம், வேப்பநத்தம்புதூர், வசந்தபுரம் ஆகிய கிராமங்களின் வழியாக புதிய பைபாஸ் ரோடு அமைவதால், அப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் மக்கள் பயனடைவார்கள். நாமக்கல் பைபாஸ் ரோடு, முதற்கட்டப்பணியாக, முதலைப்பட்டியில் இருந்து 200 மீ. தூரத்திற்கு, இணைப்பு சாலை அமைக்கும் திட்டத்திற்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட பணிக்கு ரூ. 118.50 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, டெண்டர் கோரப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டப்பணிக்கு 47.47 கோடிக்கு தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். 4வது கட்டமாக, கி.மீ. 12 முதல் 22/387 வரை பணிகள் துவங்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். நாமக்கல் புதிய பஸ் நிலையம் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு, பைபாஸ் ரோடு முதல் கட்டப்பணிகளை ஆய்வு செய்யவும், 3ம் கட்டப்பணிகள் துவக்க விழாவும், இன்று (மார்ச் -4) திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு முதலைப்பட்டியில் நடைபெறுகிறது. தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைக்க உள்ளார். இவ்வாறு ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Next Story