உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.10,000 வழங்கணும் !
உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.10,000 வழங்க கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக கருதப்படுவது உப்பு தொழிலாகும். இங்கு சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படும் நிலையில், உப்பளத் தொழிலை நம்பி சுமார் 50,000 தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த ஒன்றரை மாதங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக உப்பளங்களில் மழை நீர் தேங்கி, உப்பு உற்பத்தி செய்ய முடியாததால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு உப்பள தொழிலாளர்களுக்கு வழங்கும் மழைக்கால நிவாரணத் தொகையை நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கி வருகிறது. மேலும் குறைவான தொழிலாளர்களுக்கு வழங்கி வருவதுடன் ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் கணவன், மனைவி இருவரும் உப்பள தொழிலாளர்களாக இருந்தால் அதில் ஒருவருக்கு மட்டுமே வழங்கி வருகிறது. தற்போது வேலையில்லாத காரணத்தால் உப்பள தொழிலாளர்கள் வட்டிக்கு வாங்கி தங்கள் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு உப்பள தொழிலாளர்கள் அனைவரையும் எளிய முறையில் நல வாரியத்தில் பதிவு செய்து, அனைத்து தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மழைக்கால நிவாரணத் தொகையை ருபாய் 10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென உப்பள தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.