மோடியால் ஒவ்வொருவர் மீதும் ரூ.1.50 லட்சம் கடன் - செல்வப்ருந்தகை

நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.1.50 லட்சம் கடனை சுமத்தி இருக்கிறார் மோடி. ஆனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் தருவோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்ருந்தகை பேசினார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் பாஜக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும், வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று மோடி தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தார் ஆனால் எதையுமே செய்யவில்லை. தமிழக தேர்தலின் போது திமுக தெரிவித்த காலை சிற்றுண்டி திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், விலையில்லா பேருந்து விடியல் திட்டம், புதுமைப்பெண் திட்டம் என ஏராளமான திட்டங்களை அள்ளித் தந்த திமுக அரசு மீதமுள்ள 20 சதவீத தேர்தல் வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றி விடும் என்றார்.

ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்திய குடிமகன் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.50 லட்சம் கடனை வைத்துள்ளது.அதேநேரம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இது மட்டும் இன்றி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று தற்பொழுது அறிவித்துள்ளதோடு கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், வாக்குறுதி அளிக்காமலேயே 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.எனவே காங்கிரஸ் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.

பிரச்சாரத்தின் முன்னதாக செல்வப் பெருந்தகை பிறந்தநாள் என்பதால் பிரச்சார வாகனத்திலேயே காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவருக்கு மலர் மாலை அணிவித்து, கேக் வெட்டி கொண்டாடினார்கள், இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் மாவட்ட தலைவர் சுரேஷ் மேலிட பொறுப்பாளர் ஜான் அசோக் வரதராஜன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story