ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ.17.5 லட்சம் மோசடி
சைபர் கிரைம் (பைல் படம்)
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த 29 வயது பட்டதாரி வாலிபர் ஒருவருடைய செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த மார்ச் மாதம் குறுஞ்செய்தி வந்தது. அதில் குறிப்பிட்ட இணையதளத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதை உண்மை என நம்பிய அந்த வாலிபர் ரூ.9 லட்சத்து 38 ஆயிரம் முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு எந்த லாப தொகையும் கிடைக்கவில்லை. மேலும் முதலீடு செலுத்திய பணத்தையும் அவரால் திரும்ப பெற முடியவில்லை. இந்த மோசடி குறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சேர்ந்த வாலிபரிடம் இணையதளத்தில் பகுதிநேர வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த மாதம் ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.