தனியார் வங்கிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

தனியார் வங்கிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

ஹெச்.டி.எப்.சி. வங்கி 

வாடிக்கையாளர் கணக்கை தவறுதலாக முடக்கிய திருச்சி கண்டோன்மெண்ட் ஹெச்.டி.எப்.சி. வங்கி கிளைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் இவர், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் செயல்பட்டு வரும் எச்டிஎஃப்சி வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார். மேலும், அதே வங்கியின் கிரெடிட் கார்டும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு இவரது நடப்பு கணக்கை வங்கி நிர்வாகம் திடீரென முன்னறிவிப்பின்றி முடக்கியது.

இதுகுறித்து ஜெகநாதன் விசாரித்தபோது கிரெடிட் கார்டில் பெறப்பட்ட தொகையை செலுத்தாததால் வங்கிக்கணக்கை முடக்கியதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆனால், ஜெகநாதன் கிரெடிட் கார்டுக்கான தொகையை செலுத்தியுள்ளார். இதுதொடர்பான ஆவணங்களுடன் திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் ஆர்.காந்தி, உறுப்பினர்கள் சாயீஸ்வரி, எஸ். செந்தில்குமார் உள்ளிட்டோர் இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்தனர். அதில், மனுதாரர் தொகை செலுத்தியதற்கான ஆவணங்கள் சரியாக இருந்த நிலையிலும் வங்கி நிர்வாகம் அவரது கணக்கை முடக்கியது தவறு என்றும், அதற்காக வங்கிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், அந்தத் தொகையை ஜெகநாதனுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர். மேலும், வழக்கு செலவுகளுக்கு ரூ. 5 ஆயிரம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

Tags

Next Story