பறக்கும் படை சோதனையில் ரூ.3.32 லட்சம் பறிமுதல்!

பறக்கும் படை சோதனையில் ரூ.3.32 லட்சம் பறிமுதல்!

பணம் பறிமுதல்

கோவில்பட்டி பகுதியில் வாகன சோதனையில் வியாபாரிகள் கொண்டு சென்ற ரூ.3.32 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி பகுதியில் நேற்று நள்ளிரவில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும், நிலையான கண்காணிப்புக் குழு அலுவலருமான ஜவஹர் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த பிஸ்கட் வியாபாரி வீரபாண்டியன் என்பவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் ரொக்கப்பணம் இருப்பது தெரியவந்தது.

ஆனால் அவரிடம் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி யராஜனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் கோவில்பட்டி அருகே கயத்தார்-கடம்பூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக மினி லோடு ஆட்டோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த வாகனத்தில் கடம்பூரை சேர்ந்த மசாலா பொருட்கள் வியாபாரி முத்துக்குமார் என்பவர் எவ்வித உரிய ஆவணமும் இல்லாமல் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியராஜிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story