லாரி உரிமையாளருக்கு ரூ.4.95 லட்சம் இழப்பீடு: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

லாரி உரிமையாளருக்கு ரூ.4.95 லட்சம் இழப்பீடு: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

லாரி உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கல்


நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் சமரசத் தீர்வு மூலம் லாரி உரிமையாளருக்கு ரூ. 4.95 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள மூலப்பள்ளிபட்டி கிராமத்தில், வசித்து வருபவர் கோபி (52). இவருக்கு சொந்தமான லாரி 2013 ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி அருகே விபத்துக்குள்ளானது. அவர் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் அவருக்கு, உரிய இன்சூரன்ஸ் நிவாரணம் வழங்கவில்லை.

இதனால் அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் இன்சூரன்ஸ் கம்பெனி மீது வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் அவருக்கு ரூ 5,05,000 இழப்பீடு மற்றும் விபத்து ஏற்பட்ட நாளிலிருந்து இத்தொகைக்கு வட்டியும் வழங்க உத்தரவிட்டிருந்தது. தீர்ப்புப்படி இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் செலுத்தவில்லை.

அதை தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பை நிறைவேற்றி தருமாறு, கோபி நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி டாக்டர் ராமராஜ், இன்சூரன்ஸ் நிறுவன மேனேஜர் மற்றும் ஏஜென்ட் ஆகியோர்களுக்கு வாரண்ட் பிறப்பித்தார்.

இந்நிலையில் இது குறித்து, நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்பட்டதால், ஒப்பந்தப்படி இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிய ரூ. 4.95 லட்சத்துக்கான காசோலையை நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ் வழக்கு தாக்கல் செய்திருந்த கோபியிடம் வழங்கினார். இதனிடையே நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் காலியாக இருந்த பணியிடங்களில், புதிய உறுப்பினராக ரமோலா, நுகர்வோர் கோர்ட் அரசு வழக்கறிஞராக அர்ச்சனா மற்றும் சுருக்கெழுத்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story