பறக்கும் படையினர் சோதனையில் ரூ.7.75 லட்சம் பறிமுதல்
நாழிக்கல்பட்டியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ. 7.75 லட்சம் பறிமுதல்; உரிய ஆவணங்கள் இல்லாததால் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை நாழிக்கல்பட்டி பகுதியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் நாமக்கல்லை சேர்ந்த பிரகாஷ் என்றும் அவரிடம் ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் இருப்பதும் தெரிந்தது. மேலும் அவர் சேலத்தை சேர்ந்த காண்ட்ராக்டர் ஒருவரிடம் வேலை பார்ப்பதும், அவரிடம் இருந்து தார்சாலை அமைக்க கட்டுமான பொருட்கள் வாங்குவதற்காக ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் வாங்கி வந்ததாக தெரிவித்தார்.
ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லை என்று கூறி பறக்கும் படை அதிகாரிகள் ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர். ஓமலூரை அடுத்த செம்மாண்டப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலாஜி தலைமையிலான குழு சோதனையில் ஈடுபட்டது. அந்த வழியாக வந்த காரினை மடக்கி சோதனை செய்தபோது காரில் ரூ.3 லட்சம் இருப்பது தெரிய வந்தது.
அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கர்நாடக மாநிலம் சிக்பெல்லப்பூர் சித்லகட்டா பகுதி சேர்ந்த சோட்டுசாப் என்பது தெரிய வந்தது. அவர் செம்மாண்டப்பட்டி பகுதியில் பட்டு சேலை எடுக்க வந்ததாகவும் தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்ததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.