திமுக நிர்வாகி காரில் ரூ.8 லட்சம் பறிமுதல்
வாகன சோதனை
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்று மாலை 6 மணி வரை மட்டுமே பிரசாரங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால் பல பகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக முக்கிய சோதனை சாவடிகள், முக்கிய சாலை வழி சந்திப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கட்சியினரும் எந்தெந்த கட்சியினர் பணத்தைக் கொடுக்கிறார்கள் என கண்காணித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் புகார் அளித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் கோத்தகிரி தி.மு.க., ஒன்றிய செயலாளர் கண்ணன் என்பவரது வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தை அவரது ஓட்டுநர் இயக்கி வந்தநிலையில் அந்த வாகனத்தில் 8 இலட்சத்து 59 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் கண்ணன் கோத்தகிரி நகர் பகுதியில் மளிகை டிரேடர்ஸ் நடத்தி வருவதால் இந்த பணம் அவருடைய தொழில் சார்ந்த நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதா அல்லது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு அந்த பணம் கொண்டு செல்லப்பட்டு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.