சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.29.66 கோடி மானியம்
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எளம்பலூர் மற்றும் அரணாரை ஆகிய பகுதிகளில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேரில் சென்று பார்வையிடடு ஆய்வு செய்தார். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எளம்பலூர் ஊராட்சியில், தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் பிறைசூடன் என்பவர் தனது வயலில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் 100 சதவீர மானியத்தில் வழங்கப்பட்ட சொட்டு நீருடன் கூடிய பப்பாளி சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், சொட்டு நீர் பாசனம் பயிர்களின் விளைச்சலுக்கு எந்த அளவு பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறித்து விவசாயியிடம் கேட்டறிந்தார்.
பின்னர், எளம்பலூரில் செல்வராசு என்பவரது வயலில், 100% மானியத்தில் அமைத்துள்ள மிளகாய் மற்றும் சொட்டு நீருடன் கூடிய பப்பாளி சாகுபடி திட்டப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மிளகாய் பயிரின் மூலம் ஒரு போகத்திற்கு எவ்வளவு லாபம் ஈட்டப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, அரணாரை ஊராட்சியில், வேளாண்மைத் துறையின் மூலம் சத்யகுமார் தனது வயலில் அமைத்துள்ள நெல் விதைப் பண்ணையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மிக விரைவில் புதியதாக அமையவுள்ள நெல் கொள்முதல் நிலையத்தினை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் சிவப்பிரகாசம் செல்லப்பா என்பவருக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சி யர் மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பயனாளியிடம் அறிவுறுத்தினார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் அரசியல் திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொண்டு விவசாயிகள் பயனடைய வேண்டும் மேலும் இதுவரை வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4,998 பயனாளிகளுக்கு 4980.93 எக்டர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.29.66 கோடி மதிப்பீட்டில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளில், வேளாண்மை இணை இயக்குநர் கீதா, மாவட்ட ஆட்சியரின் வேளாண்மை நேர்முக உதவியாளர் ராணி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், துணை தோட்டக்கலை அலுவலர், உதவி விதை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.