சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம்: தனியார் நிறுவன அலுவலர்களுக்கு பாராட்டு

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம்: தனியார் நிறுவன அலுவலர்களுக்கு பாராட்டு

பணத்தை ஒப்படைத்த தனியார் நிறுவன அலுவலர்

இராசிபுரம் அருகே சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனியார் நிறுவன அலுவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ராசிபுரம் அருகே சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் நோட்டுக்கட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவர்களுக்கு பொதுமக்கள்,காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த கே.அருணாசலம், இவர் வெண்ணந்தூர் அருகேயுள்ள ஒ.செளதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் தன் நண்பரின் அவசர தேவைக்காக கொடுப்பதற்காக வேறு ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்றுக்கொண்டு ஒ.செளதாபுரத்தில் இருந்து காலை 11 மணி அளவில் ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இவர் ரூ.50 ஆயிரம் கொண்ட இரு கட்டுகளாக இருந்த பணத்தை இருசக்கர வாகனத்தின் பின் பெட்டியில் வைத்திருந்தார். ஆனால் இவர் ராசிபுரம் வந்த பார்த்தபோது இரு கட்டில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 500ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை மட்டும் காணவில்லை.

அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக திரும்பிச்சென்று சாலைகளில் தேடியுள்ளார். அப்பகுதியில் உள்ளவர்களை விசாரித்துள்ளார். ஆனால் பணம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தில் கரும்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் திருச்சி மாவட்டம் புலிவளம் பகுதியை சேர்ந்த ரகுராமன் (42), அவரது உயரதிகாரி அருண்குமார் (40) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் நிறுவனத்தின் ஆய்வு பணிக்காக ஆட்டையாம்பட்டி நோக்கி சென்று கொண்டிந்தபோது அத்தனூர் அருகேயுள்ள கொங்கணசித்தர் கோவில் முன்பாக வேகத்தடை பகுதியில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் நோட்டுக்கட்டை கண்டெடுத்தனர்.

ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லாத நிலையில், நேராக சென்று வெண்ணந்தூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் கே.சுகவனத்திடம் பணத்தை இருவரும் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து சாலையில் தவறவிட்ட பணத்தை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிச் செயலர் அருணாசலம் வெண்ணந்தூர் காவல் நிலையம் சென்றபோது, ஆய்வாளர் கே.சுகவனம் அவரிடம் பணம் கொண்டு சென்றதற்காக ஆதாரம் கேட்டு முழுமையாக விசாரணை நடத்தி பின்னர் ஒப்படைத்தார்.

இதனையடுத்து பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனியார் நிறுவன அலுவலர்களை பொதுமக்கள், காவல்துறையினர் பாராட்டினர்.

Tags

Next Story