கழுவந்தோண்டியில் பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
முகாமில் கலந்து கொண்டவர்கள்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கழுவந்தோண்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. முகாமுக்கு வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான இரா. லதா தலைமை வகித்து பேசுகையில்,
பல ஆண்டுகளுக்காக நிகழ்ந்து வந்த பெண்களுக்கு எதிரான சமூக சீர்கேடுகள் சட்டத்தின் துணைகொண்டு அகற்ற முடிந்துள்ளது.
இன்று மனித வாழ்வில் கருவில் இருந்து கல்லறை வரை சட்டம் பாதுகாப்பு அளித்து வருகிறது. சட்டங்கள் ஓவ்வொரு நாளும் புதிதாக பிறக்கின்றது . சட்டத்தின் கைகள் பெண்கள், குழந்தைகள் மட்டுமல்ல அனைவருக்கும் ஆன பாதுகாப்பை உறுதி செய்கிறது என்றார். பின்னர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
குற்றவியல் நடுவர் ராஜசேகரன் கலந்து கொண்டு பேசினார். முகாமில், நீதிமன்ற செரஸ்தார் இளங்கோ, ஜெயங்கொண்டம் வழக்குரைஞர்கள் , பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊராட்சித் தலைவர் மகாலிங்கம் வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலர் ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.