தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு ஒத்திகை
பாதுகாப்பு ஒத்திகை நடத்திய அதிகாரிகள்
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சித்தா பிரிவு ஆயூஷ் கட்டடத்தில் தீ விபத்தில் இருந்து நோயாளிகளை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்வு மற்றும் விபத்தின் போது மருத்துவர்கள் செவிலியர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா இன்று (26.04.2024) பார்வையிட்டார்.
தீயணைப்பு துறையின் சார்பில் மருத்துவமனையில் மின் கசிவு அல்லது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், அந்த அசாதாரண சூழ்நிலையிலிருந்து நோயாளிகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும், இருக்கின்ற பொருட்களை வைத்து அவர்களை எவ்வாறு மீட்பது குறித்த மாதிரி பயிற்சி தீயணைப்பு வீரர்கள் மூலம் செய்து காண்பித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், தீ தடுப்பாண்களை முறையாக கையாள்வது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், பெண்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்லது சிலிண்டர்களில் தீ பிடித்தால் அதனை தடுப்பதற்கான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டது. இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்திலிருந்து பாதுகாப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டிய சாதனங்களின் கண்காட்சி மற்றும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
மருத்துவத்துறையில் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை என்பது எவ்வாறு முக்கியமோ, அதேபோன்று தீ விபத்து ஏற்பட்டவுடன் நாம் செய்ய வேண்டிய முதல் பணிகள் மிகவும் முக்கியமானதாகும். அதன்படி, தீ விபத்து ஏற்பட்டவுடன் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து, 108 எண்ணிற்கு தகவல் தெரிவித்து,
அருகில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ்களையும் வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீ பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் போன்ற தீ தடுப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்வில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.பாலசங்கர்,
இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.ரமேஷ்பாபு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார், உதவி அலுவலர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.