சாலவாக்கம் பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலான இக்கோவில் பல ஆண்டுகளாக புனரமைப்பு பணி மேற்கொள்ளாமல் இருந்தது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை பேரில், கோவிலில் சேதமான கட்டட பகுதிகள் சீரமைக்கும் பணி நடைபெற்றது.
திருப்பணி நிறைவு பெற்றதையடுத்து நேற்று, மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த வெள்ளி அன்று அசார்யவர்ணம், அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், சனிக்கிழமை அன்று புண்யவாசனம், திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது.
நேற்று, காலை 10:30 மணிக்கு கும்ப புறப்பாடு நிகழ்ச்சியை தொடர்ந்து, 11:00 மணிக்கு கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில், சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா சக்திவேல், சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அப்பாதுரை, நிர்வாகிகள் வெங்கடேசன், நந்தா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.