கூடுதல் விலைக்கு பட்டாசு விற்பனை - கூட்டுறவு அங்காடி மீது புகார்
தீபாவளி பண்டிகைக்காக தமிழக அரசு சார்பில் மத்திய நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை மூலம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் விற்பனை செய்வது வழக்கம். பொதுமக்கள் தனியார் பட்டாசு கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்குவதை தடுக்க அரசு மூலமாக பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் நுகர்வோர் கூட்டுறவு பட்டாசு கடை செயல்படுகிறது.தீபாவளி பண்டிகைக்காக தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகே செயல்படும் கூட்டுறவு பண்டக சாலையில் 2 கடைகளில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த கடையில் இரண்டு விற்பனையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை மூலம் விற்பனை செய்யும் தீபாவளி பட்டாசுகளின் விலைப்பட்டியலை கடையின் முன்பு வைத்திருக்க வேண்டும். அதேபோல் பொதுமக்களுக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பே பட்டாசு விலை பட்டியலை துண்டு பிரசுரங்களாக விநியோகபட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டையும் செய்யாமல் விலை பட்டியலை மறைத்து வைத்து விட்டு துண்டு பிரசுரங்கள் யாருக்கும் வழங்காமல் அரசு நிர்ணயித்த தொகையை விட 3 மடங்கு முதல் 5 மடங்கு அதிக தொகை வைத்து விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். குறிப்பாக சாதாரண கம்பி மத்தாப்பு ஒரு பெட்டி அரசு நிர்ணயித்த விலை 100 ரூபாய். ஆனால் 220 ரூபாய்க்கும், நான்கு பட்டாசுகள் கொண்ட லட்சுமி வெடி 32 ரூபாய் என நியமிக்கப்பட்டிருந்தது ஆனால் அதே பட்டாசின் விலை 200 ரூபாயக்கும் விற்பனை செய்கின்றனர். இதே போல் நூறு வாலா பட்டாசு அரசு நிர்ணய தொகை 80 ரூபாய், ஆனால் விற்றது 150 ரூபாய்க்கு , இதே போல் அனைத்து பட்டாசுகளும் அரசு நிர்ணயித்த தொகையை விட மூன்று மடங்கு அதிக தொகை வைத்து விற்பனை செய்து கொள்ளை லாபம் அடைந்து வருகின்றனர். இந்த கடைகளில் விற்பனை செய்து வரும் லாபத்தில் முக்கிய அதிகாரிகளுக்கு பெரும் தொகை செல்வதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் இடைத்தரகர்கள் மூலம் லாப தொகை வசூல் செய்யப்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பட்டாசுகளை அதிக விலைக்கு விற்பனை செய்து 2 லட்ச ரூபாய் வரை லாபம் ஈட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது செய்தியாளர்களிடம் நூறு ரூபாய் பட்டாசு 400 ரூபாய்க்கு விற்பனை செய்ததை வீடியோ ஆதாரத்துடன் பிடித்து கேட்ட போது உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என பதில் அளித்துள்ளார்கள். தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு தேவையை பட்டாசுகளை தனியார் கடைகளுக்கு சென்று அதிக விலை கொடுத்து வாங்குவதை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை மூலம் பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு பட்டாசு கடைகளில் தனியார் கடைகளை விட அதிக விலைக்கு விற்பனை செய்து பொது மக்களை ஏமாற்றி ஊழியர்கள், அதிகாரிகள் லாபம் பார்ப்பது வேதனையாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.