மினி டிரக்கில் கஞ்சா விற்பனை - 5 கிலோ கஞ்சா பறிமுதல்
சூலூர் அருகே மினி டிரக்கில் கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் 5 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஹோல்சேல் மற்றும் ரீடைலில் கஞ்சா விற்பனை செய்யபடுவதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான தனி படை போலீசார் நீலம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த டாட்டா ஏஸ் மினி டிரக்கை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் விற்பனைக்காக 5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.மேலும் மினி ட்ரக்கை ஓட்டி வந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் அவர் இருகூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பதும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து நீலம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஹோல்சேல் மற்றும் ரீடைல் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நாகராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் 5 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் மினி டிரக்கையும் பறிமுதல் செய்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சூலூர் பகுதியில் 54 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் நாகராஜ் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story