கஞ்சா விற்பனை - வட மாநில வாலிபர்கள் கைது, 6 கிலோ பறிமுதல்
காவல் நிலையம்
திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீசார் சிறுபூலுவப்பட்டியை அடுத்த காவிலிபாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முகேஷ் (25) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருப்பூர்-வஞ்சிபாளையம் சாலையில் சாமிநகர் பகுதியில் ரெயில்வே பாலம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தான சாகு (32) என்ற வாலிபரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்தனர். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் சந்தான சாகு தங்கிருந்த அறையில் இருந்து போலீசார் 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.