கொளுத்தும் வெயிலுக்கு இதமாக மண்பானை விற்பனை 'ஜோர்'

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக மண்பானை விற்பனை ஜோர்

 தஞ்சாவூரில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக குளிர்ச்சி மிகுந்த மண் பானைகளின் விற்பனை தீவிரமாக நடக்கிறது. 

தஞ்சாவூரில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக குளிர்ச்சி மிகுந்த மண் பானைகளின் விற்பனை தீவிரமாக நடக்கிறது.

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் மண்பானைகளை தேடிப்பிடித்து வாங்கி வருகின்றனர். தற்போது மக்கள் மத்தியில் பைப் வைத்த மண்பானைகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.இயற்கை முறையில் குளிரூட்டப்பட்ட தண்ணீர் உடல் சூட்டையும், தாகத்தையும் தணிக்கும். நாகரிக உலகில் பிளாஸ்டிக் குடங்கள், சில்வர் பாத்திரங்கள், ஈயப்பாத்திரங்களின் வருகையால் மண்பானைகளின் பயன்பாட்டை மக்கள் மறந்து போய்விட்டனர். கோடைகாலம் வந்தால் தான் மக்கள் மண்பானைகளை தேடுகின்றனர்.

ஆனால் அனைத்து நாட்களிலும் மண்பானைகளில் வைத்து தண்ணீரை குடிப்பதால் ஆரோக்கியம்தான். கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மண்பானைகளை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதை மனதில் கொண்டு மண்பாண்ட தொழிலாளர்கள் புதுப்புது பானை ரகங்களை தயார் செய்கின்றனர். இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் மண் பானைகளில் தற்போது குழாய் பொருத்தப்பட்டு விற்பனை வருகிறது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் நீலகண்டன் என்பவர் பலவகை மண்பானைகளை விற்பனை செய்து வருகிறார் 30 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் பெரிய அளவிலான பைப் வைத்த பானை ரூ.300க்கும், அதில் சிறிய அளவிலான பானை ரூ.250க்கும் விற்பனையாகிறது. மண்பானைகள் அளவுக்கு தகுந்தார்போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. சிறிய மண்பானை ரூ.100, ரூ.150க்கும் விற்பனையாகிறது. பைப் வைத்த பானைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதேபோல் மண்ணால் செய்யப்பட்ட வாட்டர் ஜக் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் சமையலுக்கு பயன்படுத்தும் மண்சட்டிகள் அளவுக்கு தகுந்தார் போல் ரூ.150, ரூ.100 என விற்கப்படுகிறது.

மேலும் குழிப்பணியார சட்டி ரூ. 100க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் புதுச்சேரியில் இருந்து மண்ணை அரைத்து இயந்திரங்கள் வாயிலாக செய்யப்பட்ட மீன் குழம்பு சட்டிகளை வாங்கி வந்து விற்கிறார். இவை அளவுக்கு தகுந்தார் போல் ரூ.150, ரூ.130, ரூ.100 என விற்கப்படுகிறது. இதே போல் கருப்பு சட்டிகள் சிறிய அளவு ரூ. 100லிருந்து பெரிய அளவு ரூ. 250 வரை விற்கப்படுகிறது. மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட தண்ணீர் ஜக்குகளும் அதிகம் விற்பனையாகிறது. இதேபோல் மண் பூச்சட்டி, விற்பனைக்கு உள்ளது. மேலும் தயிர் பானைகள் ரூ. 80, ரூ.90க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து மண் பானை வியாபாரி கூறுகையில், கோடைகாலம் என்பதால் ஏழைகளின் குளிர்பதன பெட்டியாக மண்பானைகள் தான் உள்ளது. மண் பானையில் இயற்கையான முறையில் குளிரூட்டப்பட்ட நீரை பருக முடியும். அதே போல் மண் பானை ஒரு மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவியாகும். பானையில் குடிதண்ணீரை ஊற்றிவைத்து 2 முதல் 5 மணிநேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள தீய கிருமிகளை மண்பானை உறிஞ்சி அழித்துவிடும் என்று சொல்வார்கள். தற்போது பைப் பொருத்தப்பட்ட மண்பானைகள் அதிகம் விற்பனையாகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக ரூ_3 ஆயிரம் வரை மண் பானைகள் விற்பனையாகிறது. மேலும் மண்ணால் செய்யப்பட்ட விளக்கு, உள் விளக்கு, உண்டியல், மண்பானை மூடி போன்றவையும் விற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story