கெட்டுப்போன பிரியாணி விற்பனை - உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை

ஊட்டியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் வாடிக்கையாளருக்கு கெட்டுப்போன பிரியாணி விற்பனை செய்தது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தலை பெருமாள். இவருடைய மனைவி லியோ. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஊட்டி 121 போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். செந்தலை பெருமாள் சமீபத்தில் பணியிட மாற்றம் காரணமாக சென்னை சென்று விட்டதால், லியோ தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லியோ குடியிருப்பு அருகில் வசிக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் குழந்தை பிளஸ்-2 தேர்ச்சி பெற்றதால் அவர் ஊட்டியில் உள்ள பிரபல ஓட்டலில் 2 பிரியாணி வாங்கி வந்து லியோ குடும்பத்தினருக்கு கொடுத்து ட்ரீட் வைத்துள்ளார்.

பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட லியோவின் குழந்தைகள், பிரியாணியை பிரித்து தட்டில் கொட்டியவுடன் துர்நாற்றம் வீசியது. பிரியாணி முழுவதும் கெட்டுப் போய்விட்டதால், லியோ பிரியாணியை எடுத்துக் கொண்டு உணவகத்திற்குச் சென்று இது குறித்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. உணவக நிர்வாகத்தினர் அதற்குரிய பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று பிரியாணியை வாங்கிக் கொண்டு கூகுள்பே மூலம் பணம் அனுப்பி உள்ளனர். ஆனால் கெட்டுப்போன பிரியாணியை மற்றவர்களுக்கு விற்க வாய்ப்பு உள்ளது என்பதால், லியோ இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட லியோ நிருபர்களிடம் கூறியதாவது:- ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதால், உணவகங்களில் விற்பனை அதிக அளவில் நடக்கிறது. இந்த சூழ்நிலையில் கெட்டுப்போன பிரியாணி உள்ளிட்டவற்றையும் ஒரு சில உணவக நிர்வாகத்தினர் விற்பனை செய்து விடுகின்றனர். ஒருவேளை விஷயம் தெரியாமல் எனது குழந்தைகள் பிரியாணியை சாப்பிட்டு இருந்தால் உடல் நலகுறைவு ஏற்பட்டிருக்கும். எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும். மேலும் கெட்டுப்போன உணவு வினியோகம் செய்த உணவகம் மீது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story