தேர்தலை முன்னிட்டு களைகட்டிய மது விற்பனை !
மது விற்பனை
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில் அனல்பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
தேர்தலின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க 17, 18, 19- ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் குடிமகன்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி இருப்பு வைப்பதற்காக கடைகளில் குவிந்தனர்.
வழக்கமாக மதுக்கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை செயல்படும். இதனால் செவ்வாய்க்கிழமை தஞ்சை மாவட்டத்தில் உள்ள 136 டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றதை காணமுடிந்தது. சிலர் தாங்கள் விரும்பிய மதுபானங்கள் கேட்டு இல்லாததால், கடையில் இருந்த வேறு ரக மதுபானங்களை வாங்கி சென்றனர்.
இதன் மூலம் செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன. வழக்கமான நாட்களில் தஞ்சை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடிக்கு விற்பனை நடைபெறும். ஆனால் ஒரே நாளில் 2 மடங்கு அதிகமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.