சேலம் : தேர்தல் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார்

சேலம் : தேர்தல் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார்

பைல் படம் 

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 12 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக சேலம் மாநகருக்கு 3 கம்பெனியும், மாவட்டத்திற்கு 3 கம்பெனியும், தர்மபுரிக்கு 2 கம்பெனியும், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தலா ஒரு கம்பெனியும் வந்துள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 12 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தவும், அவர்களுக்கு விரைவில் பணி ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது

. தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், அந்தந்த மாவட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளில் தேர்தல் பிரிவு போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஓய்வுபெற்ற சீருடை பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓய்வுபெற்ற போலீசார், வனத்துறையினர், முன்னாள் ராணுவத்தினரும், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள மையங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், வாக்குப்பதிவுக்காக எந்திரங்களை எடுத்து செல்லவும், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்னர். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்து அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும், என்றனர்.

Tags

Next Story