சேலம் :என்ஜினீயர் வீட்டில் 31 பவுன் நகை, பணம் திருட்டு
திருட்டு நடந்த வீடு
சேலம் கன்னங்குறிச்சி தியாகராஜா நகரை சேர்ந்தவர் வாரி சீனிவாசன். என்ஜினீயரான இவர், வேலை நிமித்தமாக சென்னைக்கு சென்றுவிட்டார். இவருடைய தந்தை குமார், தாய் சிவகாமி. இவர்கள் இருவரும் வைகுண்ட ஏகாதசியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 31 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீடு பூட்டி இருப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு நள்ளிரவில் நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
மேலும் திருடர்கள் அக்கம் பக்கத்தில் வசிக்கும் ஆட்கள் யாரேனும் வந்துவிடுவார்களோ? என்ற பதற்றத்தில் திருடிய 1½ பவுன் மோதிரத்தை வீட்டில் கீழே போட்டு விட்டு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மோதிரத்தை போலீசார் மீட்டு குமாரிடம் கொடுத்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்றும், அவ்வாறு பொருத்தியிருந்தால் திருடர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.