நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க 2 கைதிகள் விருப்பம்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க  2 கைதிகள் விருப்பம்

பைல் படம் 

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க 2 கைதிகள் விருப்பம் தெரிவித்து உள்ளதாக சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு வினோத் தெரிவித்தார்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகள் தேர்தலில் வாக்களிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதாவது அந்த கைதிகள் வாக்களிக்க முதலில் விருப்பம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் கைதிகளிடம் அதற்கான விருப்ப கடிதம் வாங்கி கைதிகளின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட பின் கைதிகள் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.

அதன்படி சேலம் சிறையில் அவ்வாறு கைதிகள் வாக்களிக்க உள்ளனரா? என்று சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வேறு எந்த வழக்கும் இல்லை என்றால் அவர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம். சேலம் மத்திய சிறையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, வேறு எந்த வழக்கும் இல்லாத 97 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் கஞ்சா விற்ற வழக்கில் காட்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்ட 2 கைதிகள் மட்டுமே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். அதன்படி 2 பேரிடம் இருந்து விருப்ப கடிதம் வாங்கி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து அனுமதி கடிதம் வந்த பிறகு 2 கைதிகள் சேலம் சிறையிலேயே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story