சேலம் : தாமதமாக வந்த கோவை-லோக்மான்ய திலக் ரெயில் -பயணிகள் அவதி
ரயில் (பைல் படம்)
கோவையில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு லோக்மான்யதிலக் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-11014) ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கோவையில் இருந்து வழக்கமாக காலை 8.50 மணிக்கு புறப்பட வேண்டும். ஆனால் நேற்று அந்த ரெயில் 3.34 மணி நேரம் தாமதமாக மதியம் 12.24 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது. மறுமார்க்கத்தில் லோக்மான்யதிலக்கில் இருந்து வந்த ரெயில் தாமதமானதால் கோவையில் இருந்து ரெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு காலை 11.20 மணிக்கு வர வேண்டிய கோவை-லோக்மான்யதிலக் ரெயில் பிற்பகல் 3.19 மணிக்கு வந்தடைந்தது. சுமார் 4 மணி நேரம் தாமதமாக ரெயில் வந்தது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து 3.23 மணிக்கு புறப்பட்டு சென்றது. ரெயில் தாமதமாக வந்ததால் கோவை மற்றும் வழித்தடத்தில் திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த ரெயிலில் செல்வதற்காக முன்பதிவு செய்த மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் அடிக்கடி இந்த ரெயில் தாமதமாக வருவதால் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் பயணிகளால் செல்ல முடியவில்லை. இதனால் பயணிகள் பலர் வேறு ரெயில்கள் மற்றும் பஸ்களில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ரெயிலை சரியான நேரத்துக்கு இயக்க ரெயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.