சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- 2024-ம் ஆண்டில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். வெல்டர், பெயிண்டர் (பொது), வயர்மேன் போன்ற பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், மெசினிஸ்ட் கிரைண்டர், டர்னர், மோட்டார் மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தொடங்கப்பட்ட பல்வேறு பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் மற்றும் சாதி சான்றிதழ், செல்போன் எண், ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆகும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750-ம், பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக்கருவி, பஸ்பாஸ் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களில் வளாக தேர்வு மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 ஆகும். மேலும் அவர்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும். பயிற்சி பெற விருப்பமுடையவர்கள் ஜூன் மாதம் 7-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.