சேலத்தில் பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு: 2,342 பேர் பங்கேற்பு
தேர்வில் பங்கேற்றவர்கள்
அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பதவிகளை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேற்று நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த தேர்வை எழுதுவதற்கு 2,422 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இதற்காக சேலம் மரவனேரி பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாரதா மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, மரவனேரி செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளி, சிறுமலர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணி முதலே தேர்வர்கள் வரத்தொடங்கினர். அவர்களை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம், காலை 9.30 மணிக்கு பிறகு வந்த தேர்வர்கள், தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
6 மையங்களில் நடந்த இத்தேர்வினை 2,342 பேர் மட்டுமே கலந்து கொண்டு எழுதினர். இந்த தேர்வு பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் என 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமையில் அதிகாரிகள் தேர்வு மையங்களில் ஏதேனும் முறைகேடு நடக்கிறதா? என்பது குறித்து கண்காணித்தனர். இதனிடையே சேலம் சாரதா மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான தேர்வுகளை மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.