சேலம் கோட்டம் டிக்கெட் இல்லாமல் பயணம்: ரூ.1.92 கோடி அபராதம் வசூல்
கோப்பு படம்
சேலம் ரயில்வே கோட்டத்தில், கடந்த மாதம் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 25,811 பேரிடம் இருந்து ரூ.1.92 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது
. நாடு முழுவதும் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணம் செய்யும் நபர்களை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனர். தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில், கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா உத்தரவின் பேரில் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா தலைமையிலான குழுவினர் சோதனையை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் (ஜனவரி), சேலம் கோட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில் சிறப்பு சோதனைகளை டிக்கெட் பரிசோதகர்கள் நடத்தினர். இச்சோதனையின் மூலம் டிக்கெட் இன்றி பயணம், முன்பதிவில்லா டிக்கெட் எடுத்துக் கொண்டு முன்பதிவு பெட்டியில் பயணம், இரண்டாம் வகுப்பு முன்பதிவு டிக்கெட் வைத்துக் கொண்டு ஏசி பெட்டிகளில் பயணம் என முறைகேடாக பயணித்த 25811 பேரிடம் இருந்து 1,92 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இது பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணிப்போருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 2 மாதத்தில் 73.68 கோடி அளவிற்கு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அதனால், பயணிகள் முறையாக டிக்கெட் எடுத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்றனர்.