சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா

சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா

 பங்குனி திருவிழா 

சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பலர் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.
சேலம் குமாரசாமிப்பட்டியில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 19-ந் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்வலமும், சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மதியம் 12.30 மணியளவில் குமாரசாமிப்பட்டி, வின்சென்ட், அஸ்தம்பட்டி பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் அலகு குத்தி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். காந்திரோடு பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் பக்தர்கள் விமான அலகு குத்தி மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். இதுதவிர மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு அக்னி கரகமும், பூங்கரகத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடந்தது. விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வின்சென்ட் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலையில் அம்மன் திருக்கல்யாணமும், தொடர்ந்து அக்னி குண்டம் பொருத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு அம்மன் பக்தர்களுடன் சின்னதிருப்பதி சென்று மஞ்சள் நீராடி, மஞ்சள் ஆடை அணிந்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியும், பின்னர் பக்தர்கள் அக்னி குண்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு பால்குடம் ஊர்வலமும், அம்மனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடக்கிறது. 30-ந் தேதி இரவு 7 மணிக்கு சத்தாபரணம், 31-ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story