தனியார் கிளினிக்கை உடைத்து ரூ.15.60 லட்சம் மருத்துவ உபகரணங்கள் கொள்ளை

தனியார் கிளினிக்கை உடைத்து ரூ.15.60 லட்சம் மருத்துவ உபகரணங்கள் கொள்ளை

மருத்துவ உபகரணங்கள் கொள்ளை 

கொள்ளை புகாரில் வீட்டின் உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு

சேலம் கன்னங்குறிச்சி ஜட்ஜ்ரோடு எழில் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். மேலும், சேலம் அழகாபுரம் ஏ.ஏ.ரோடு பகுதியில் விஜயலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டை மாதம் ரூ.14 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்து அங்கு கிளினிக் நடத்தி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 6-ந் தேதி கிளினிக்கில் இருந்த ரூ.15.60 லட்சம் மதிப்புள்ள பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அழகாபுரம் போலீசில் ராதாகிருஷ்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில், வீட்டின் உரிமையாளர் மற்றும் சிலர் லாரியை வரவழைத்து கிளினிக்கில் இருந்த மருத்துவ உபகரணங்களை எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும், கிளினிக்கிற்கான வாடகை செலுத்தாததால் வீட்டின் உரிமையாளர், ஆட்களை வைத்து பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், தனது கிளினிக்கில் இருந்த மருத்துவ உபகரணங்களை வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் திருடி சென்றுவிட்டதாக புகார் கொடுத்தார். அதன்பேரில், விஜயலட்சுமி, அவரது மகள் ராதா மற்றும் உறவினர்கள் கோபிநாத், பூபாலன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story