சேலம் : தங்கத்தேரை இழுத்து அமைச்சர் சேகர்பாபு வழிபாடு..!
சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு தரிசனம்
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மாரியம்மனை தரிசனம் செய்து தங்கத்தேரை இழுத்து வழிபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கோட்டை மாரியம்மன் கோயிலில் 2016ம் ஆண்டு திருப்பணிகள் துவங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் குடமுழுக்கு விழா தள்ளிப்போனது. ஆனால் ஸ்டாலின் முதல்வரான பிறகு அடிக்கடி நேரடி ஆய்வு செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
திமுக ஆட்சியில் இதுவரை 1118 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. குடமுழுக்கு நடைபெறாத கோயில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துகின்ற ஆட்சி இந்த ஆட்சி என்பதற்கு இந்த கோயிலே சாட்சி. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 5428 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்கப்பட்டுள்ளது. 67 தங்க தேர்கள், 57 வெள்ளி தேர்கள் நல்ல நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் புதிதாக 3 தங்கதேர்கள் 5 வெள்ளி தேர்கள் வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த பணிகளும் நடைபெற்று வருகிறது. முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் கோயில் திருப்பணிகளும், தேர் மராமாத்து பணிகளும் புதிய தேர்கள் வாங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 71 புதிய மரத்தேர்கள் 58 கோடி செலவில் செய்து கொண்டு இருக்கிறோம். கோயில் திருப்பணிகள் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. வசைப்பாடியவர்களும் திமுக ஆட்சியை வாழ்த்தும் நிலையில் உள்ளனர். தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பு இருக்கிறது என்பதற்கு கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற மக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் இலவசமாக தண்ணீர் பாட்டில் வழங்கிய நிகழ்வே சாட்சி மாநில அளவில் 7036 திருக்கோயில்களுக்கு தொல்லியல் வல்லுநர் குழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 1200 கோயில்களுக்கு மட்டுமே தொல்லியல் வல்லுநர் குழு அனுமதி வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 450 கோடி ரூபாய் அரசு மானியமாக கோவில் திருப்பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இவ்வளவு பெரிய தொகையை மானியமாக வழங்கியதில்லை. தான் அதிகாரத்திற்கு வந்தால் இந்து சமய அறநிலைத்துறையே இருக்காது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை அந்த பதவியில் இருப்பாரா என பாருங்கள்? இருந்தால் இந்து சமய அறநிலையத்துறை குறித்து பேசட்டும். என கூறினார்.