பணம் இரட்டிப்பு மோசடி விவகாரம் - தரையில் புரண்டு அழுததால் பரபரப்பு
தீபக் திலக்
சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் சட்டை கிழிந்தபடி அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அய்யோ... என்னை காப்பாற்றுங்கள் என்று கூறிக்கொண்டே ஓட்டல் முன்பு தரையில் விழுந்து உருண்டு புரண்டு அழுதார். அவரது அலறல் சத்தத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவரது பெயர் தீபக் திலக் என்பதும், அவர் திருப்பூர் மாவட்டம் ஆலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:- பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு தீபக்திலக், ஒரு தனியார் நிறுவனம் தொடங்கி உள்ளார். தொடர்ந்து சேலம், நாமக்கல், திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கிளைகள் தொடங்கி நிறுவனத்தில் ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தால் 20 மாதத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது.
முதலில் பணம் செலுத்தும் போது சிறப்பு பரிசாக பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வழங்குவதாகவும் கூறி உள்ளார். இதை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் சிறு,சிறு தொகையாக கோடிக்கணக்கில் முதலீடு செய்து உள்ளனர். இந்த நிலையில் பணம் கட்டியவர்களுக்கு பணம் வழங்க வில்லை. இதனால் தீபக்திலக்கிடம் பணம் கட்டியவர்கள் பல முறை கேட்டு உள்ளனர். ஆனால் சரியான பதில் இல்லை. இதையடுத்து பணம் கொடுத்த பலர் அவரை தொடர்பு கொண்டு சேலத்திற்கு வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று கூறி உள்ளனர். அவர் நேற்று சேலம் வந்து புதிய பஸ் நிலையம் எதிரே தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கினார். அவரிடம், பணம் கட்டியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது தீபக்திலக் தன்னை தாக்குவதாக கூறி ஓட்டலுக்கு ெவளியே ஓடி வந்து தரையில் உருண்டு புரண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.