சேலத்தில் நவீன எரிவாயு தகன மேடை - மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு
சேலத்தில் நவீன தகன மேடை
சேலம் மாவட்டம், சங்ககிரியில் முதன்முறையாக புதிதாக கட்டப்பட்ட நவீன எரிவாயு தகனமேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டது.
சங்ககிரி பேரூராட்சியில்18 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சங்ககிரி பகுதிகளில் பல்வேறு காரணங்களால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய பொதுமக்கள் ஈரோடு,திருச்செங்கோடு, எடப்பாடி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் எரி தகன மயானங்களுக்கு கொண்டு சென்று தகனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில்கொண்டு மறைந்த திரைப்பட இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் வம்சாவழியினர் ஒன்றிணைந்து நடத்தி வரும் முருக சந்திரா எஜூகேசனல் மற்றும் சோசியல் பவுண்டேசன் டிரஸ்ட், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு பொது நல அமைப்புகளும் இணைந்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 1.53 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து பேரூராட்சி நிர்வகத்திடம் ஒப்படைத்தனர்.
இதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.அதனையடுத்து அனைத்து பணிகளும் முடிவுற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு இன்று தொடங்கியது.எரிவாயு தகனமேடை தினசரி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட உள்ளது என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.