சேலத்தில் தொடர்ந்து 9-வது நாளாக 100 டிகிரி வெயில் பதிவு

சேலத்தில் தொடர்ந்து 9-வது நாளாக 100 டிகிரி  வெயில் பதிவு

சுட்டெரிக்கும் வெயில்

சேலத்தில் தொடர்ந்து 9-வது நாளாக 100 டிகிரி வெயில் பதிவானது.

சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக கடந்த 22-ந் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து 9 நாட்கள் 100 டிகிரியை தாண்டி வெயிலின் அளவு பதிவாகி உள்ளது.

இதில் அதிகபட்சமாக நேற்று 103.7 டிகிரி பதிவானது. வெயிலின் தாக்கத்தால் சாலையில் நடந்து செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. மதிய வேளையில் அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிப்பதால் பெரும்பாலான இடங்களில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதிலும் குறிப்பாக முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர்.

அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் சிலர் குடை பிடித்தவாறு செல்கின்றனர். மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பெண்கள் தலை மற்றும் முகத்தில் வெயில் படாதபடி துணி அல்லது துப்பட்டாவால் சுற்றிக்கொண்டு பயணிக்கின்றனர். வெயில் அதிகரித்து வருவதை தொடர்ந்து சாலையோரத்தில் ஆங்காங்கே பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்ப்பூசணி, கரும்புச்சாறு உள்ளிட்ட கடைகள் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ள பொதுமக்கள் அதை வாங்கி பருகி தாகத்தை சற்று தணித்து வருகின்றனர்.

வெயிலினால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சில குழந்தைகளுக்கு வெப்ப அலர்ஜியும் ஏற்படுகிறது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே சேலத்தில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Tags

Next Story