பயிர்க்கடன் வழங்கியதில் சேலம் மாநில அளவில் முதலிடம்
மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி
மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க 2023-2024-ம் ஆண்டுக்கு அரசு நிர்ணயித்த ஆண்டு குறியீடு ரூ.1,007 கோடியில் தற்போது 1 லட்சத்து 8 ஆயிரத்து 454 விவசாயிகளுக்கு ரூ.956.65 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகைகள் அனைத்தும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடனை விவசாயிகள் உரிய தவணை தேதியில் திருப்பி செலுத்தும் போது விவசாயிகள் வட்டி செலுத்த தேவையில்லை. அதற்குண்டான வட்டியை அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. மேலும், ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்க கே.சி.சி. திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 2023-2024-ம் ஆண்டிற்கு ரூ.246.93 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 33,379 விவசாயிகளுக்கு ரூ.148.73 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை மூலம் நடப்பாண்டில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 454 விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.956.65 கோடியும், கால்நடை பராமரிப்பு கடனாக 33,379 விவசாயிகளுக்கு ரூ.148.73 கோடி கடன் என மொத்தம் இந்த இரண்டு வகையான திட்டங்களின் மூலம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 833 விவசாயிகளுக்கு ரூ.1,105.38 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கியதில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது