சேலம் ஏற்காடு கோடை விழாவில் சமையல் போட்டி
சேலம் ஏற்காடு கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி நடந்தது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா, மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு 47-வது ஏற்காடு கோடை விழா, மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் கோடை விழா- மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2-வது நாளான நேற்று காலை ஏரி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் சார்பில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் மலர் கண்காட்சியை காண வந்திருந்த சுற்றுலா பயணிகள் 40-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு அடுப்பு மற்றும் எண்ணெய் இல்லாமல் காய்கறிகள், பழ வகைகள், நவதானியங்களை பயன்படுத்தி 30 நிமிடத்தில் சமைத்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த காய்கறிகள், பழ வகைகளை கொண்டு ஆர்வமுடன் சமைக்க தொடங்கினர். தயிர் அவுல், பேரிச்சம்பழம் லட்டு, பழங்களால் ஆன புரூட் சாலட், காய்கறி சாலட், முளைகட்டிய சிறுதானியங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுகளை சமைத்தனர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.