குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு குதிரை வாகனத்தில் அம்மன் வையாளி கண்டருளும் நிகழ்வு நடந்தது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 7 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். அதேபோல் தினமும் இரவு 8 மணிக்கு பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சிநடைபெறுகிறது.
இந்நிலையில் சித்திரை தேர்த்திருவிழா ,9 ம் நாளில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்வு நடைப்பெற்று கோயில் உள்பிரகாரம் மற்றும் தேரோடும் வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.