காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
கும்பாபிஷேகம்
காஞ்சிபுரத்தில் திருத்தலமான புஷ்பவல்லி தாயார் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் திருக்குடமுழுக்கு விழா
காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே திருத்தலமான புஷ்பவல்லி தாயார் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் இதற்கு முன் 1982, 2003 ஆகிய ஆண்டுகளில் திருக்குடமுழுக்கு விழா நடந்தது. தற்போது, அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார் தலைமையிலான குழு சார்பில், 2 கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 23ல் யாக சாலை பூஜைகள் துவங்கின. இதில், நான்காம் நாளான நேற்று அதிகாலை விஸ்வரூபம், கோபூஜை 4:00 மணிக்கு யாகசாலையில் சதுஸ்தானார்ச்சனம் உள்ளிட்டவை நடந்தது. காலை 6:30 மணிக்கு, கோவில் ராஜகோபுரம் மற்றும் பிற கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலஸ்தானம் மூர்த்திகளுக்கும், சன்னிதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலையில் உற்சவர் வீதியுலா நடந்தது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.கே.பி.எஸ்.சந்தோஷ்குமார், செயல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி பா.உ.செம்மல், அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு மனைவி சாந்தி, ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதிதாசன். உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மண்டல குழு தலைவர் சாந்தி, மாநகராட்சி தி.மு.க.,- கவுன்சிலர் கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்."
Next Story