கேரளாவிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும்: பெ. மணியரசன்
செய்தியாளர்களை சந்தித்த மணியரசன்
ஓசூரில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் 9 வது தலைமை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ மணியரசன், பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காப்போம், தன்னாட்சி மீட்போம், ஆளுநர் பதவி ஜிஎஸ்டி ஆகியவை இருக்க கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெ.மணியரசன், ஆளுநர் பதவி இந்திய அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும், கல்வி, வேளாண்மை, வனத்துறை போன்ற அதிகாரங்கள் பொது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்,
ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், அரசு மற்றும் தனியார் துறைகளில் 90 சதவீத வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு துறைகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கே வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும், படித்த மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிகளுக்கு ஏற்ப உரிய சம்பளத்தோடு வேலைகளை கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அவர்களுக்கு மற்ற நாடுகளில் வழங்குவதை போல வாழ் ஊதியம் கொடுக்க வேண்டும்,
வெளிமாநில தொழிலாளர்களை புறக்கணிக்க கூடிய இயக்கத்தை தமிழர்களே நடத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிதாக அணை கட்டி தருவதாக கேரளா அரசு நாடகமாடி வருகிறது. முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ளது என உச்ச நீதிமன்றம் நியமித்த வல்லுனர் குழு பார்வையிட்டு சான்று அளித்துள்ளது.
மாதாமாதம் அணை பாதுகாப்பாக உள்ளதா என வல்லுநர் குழுவினர் பார்த்து சான்று அளித்து வருகிறார்கள். அங்கு எந்த அபாயமும் இல்லை, எனவே முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பது கேரளாவின் நோக்கமாக உள்ளது.
எனவே இந்த விஷயத்தில் கேரளா அரசோடு தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லையென்றால் கேரளாவிற்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க வேண்டும், தமிழ்நாட்டில் இருந்து எந்த பொருளும் கேரளாவுக்கு அனுப்பக்கூடாது. அங்கிருந்து எந்த பொருளும் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என தெரிவித்தார். கர்நாடகாவில் மேகேதாட் அணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது என புருடா விடுகிறார். தமிழகத்தில் கருணாநிதி அமைச்சராக இருந்தபோது கர்நாடகாவில் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி ஆகிய இடங்களில் அணை கட்டினார்கள். யாருடைய ஒப்புதல்களையும் அவர்கள் வாங்கவில்லை, 98 டிஎம்சி தண்ணீர் பாக்கி உள்ளது. தற்போது அங்கு பருவமழை பெய்து வருகிறது.
அணைகள் நிரம்பி வழிந்தால் தான் நமக்கு தண்ணீர் ஆனால் அந்த தண்ணீரும் நமக்கு கிடைக்கக் கூடாது என 66 டிஎம்சி கொள்ளளவில் புதிதாக மேகேதாட்டில் அணை கட்டி வருகிறார்கள். அதனை தடுக்க விட்டால் தமிழ்நாடு பாலைவனமாகும் அனைவரும் வேறு எங்காவது செல்ல வேண்டிய நிலை தான் ஏற்படும், அங்கே பல்வேறு வேலைகள் நடைபெற்று வருகிறது. எனவே தமிழக அரசு ஒரு வல்லுனர் குழுவை கர்நாடகாவுக்கு அனுப்பி மேகேதாட்டில் என்ன நடக்கிறது என பார்க்க வேண்டும், கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். அமராவதி ஆற்றில் வரக்கூடிய தண்ணீரை தடுக்க சிலந்தி என்ற இடத்தில் கேரள அரசு புதிய அணை கட்டி வருகிறார்கள், ஏற்கனவே ஆந்திரா அரசு பல தடுப்பணைகளை கட்டி உள்ளது. கர்நாடக அரசும் தடுப்பணைகளை கட்டி உள்ளது. இதனை தடுக்காமல் தமிழக அரசு திராவிட ஆட்சி நடத்தி வருகிறோம் என கூறுவது ஏமாற்று வேலையாகும், திமுக ஆட்சியில் உள்ளது
ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக என்ன செய்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் தமிழர்களின் நலனை காக்க என்ன செய்கிறார்கள், தேர்தல் மற்றும் பதவிக்காக வீடு வீடாக சுயநலத்திற்காக வேலை செய்தீர்கள், தமிழ்நாட்டு உரிமைகளை பாதுகாக்க ஆயிரத்தில் ஒரு பங்காவது வேலை பார்க்கிறீர்களா என அனைத்து கட்சிகளையும் பார்த்து நான் கேட்கிறேன் என தெரிவித்தார். ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும், ஆனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது, குடிநீருக்கு கூட தண்ணீர் இல்லை, கர்நாடகா அரசு விகிதாச்சார அடிப்படையிலாவது தண்ணீர் விட வேண்டும் அதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கை வைக்க வேண்டும் என தெரிவித்தார். பேட்டி : பெ. மணியரசன் - மாநிலத் தலைவர், தமிழ் தேசிய பேரியக்கம்.