மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு இயக்கம்
தஞ்சாவூரில் மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தினர்.
மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மாட்டு வண்டியில் மணல் எடுத்து பிழைப்பு நடத்திட, முள்ளங்குடி, நடுப்படுகை, மருவூர், திருச்சென்னம்பூண்டி மணல் குவாரிகளை திறக்கக் கோரி, மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் பெருந்திரள் முறையீடு இயக்கம் புதன்கிழமை காலை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்ட பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மணல் மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், சுதாகர், கரிகாலன், சங்கையன், உலகநாதன், ரமேஷ் உள்ளிட்ட திருவிடைமருதூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், பூதலூர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், "விரைவில் மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுப்பதாக" தெரிவித்துள்ளார்.
பின்னர் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் கூறுகையில், திருவிடைமருதூர் தாலுகா முள்ளங்குடியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செயல்பட்டு வந்த மாட்டு வண்டிக்கான மணல் குவாரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாட்டு வண்டியில் மணல் எடுக்க உறுதியளித்தபடி கொள்ளிடம் ஆற்றில் நடுப்படுகை, மருவூர், திருச்சென்னம்பூண்டி ஆகிய இடங்களில் காலம் கடத்தாமல் மணல் குவாரியை உடனே துவங்கிட வேண்டும். பாபநாசம் தாலுகா புத்தூர் அரசு மணல் கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ள மணலை, மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று பிழைப்பு நடத்திட உரிய அனுமதி வழங்க வேண்டும்.
மாட்டு வண்டியில் மணல் எடுக்கும் கட்டணத்தை ரூபாய் 700 லிருந்து 250 ஆக குறைக்க வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மணல் எடுத்து பிழைப்பு நடத்திட மணல் குவாரிக்கான அனுமதியை வழங்க வேண்டும்" என்றார்.