பெரியபட்டினத்தில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு மதநல்லிணக்க சந்தனக்கூடு கந்தூரி விழா 123 ஆவது ஆண்டு விழாவையொட்டி தொடக்க நிகழ்ச்சியாக இன்று மாலை கொடியேற்றம் நடைபெற்றது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டார்.
இதற்காக ஜலால் ஜமால் பள்ளி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. குதிரைகள் நடனம், வாணவேடிக்கையுடன் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின்பு தர்கா மினராவில் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மவுலீது ஓதப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரியபட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து மதத்தினர் திரளாக கலந்து கொண்டனர். வருகிற 23 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை சந்தனக்கூடு திருவிழா தொடங்கி மறுநாளான 24ந்தேதி திங்கட்கிழமை கந்தூரி விழா நடைபெறுகிறது. தொடர்ந்து, ஜூலை 7ந்தேதி கொடி இறக்கம் நடைபெற இருக்கிறது.விழா ஏற்பாடுகளை சந்தனக்கூடு விழா கமிட்டியினர் அனைத்து சமுதாய மக்கள் செய்து வருகின்றனர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மேலும் இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராமநாதபுரம் சட்டமன்ற திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கூறுகையில், மத நல்லிணக்க நிகழ்ச்சியாக நடைபெற்று வரும் இந்த சந்தனக்கூடு திருவிழாவில் ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் நான் பங்கேற்க இந்தப்பகுதி பொதுமக்கள் எனக்கு வாய்ப்பளித்துள்ளனர். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் கனி வெற்றி பெற்றது சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுவதாக தெரிவித்தார் பெருமை கொள்கிறேன்.