ஏரியில் கொட்டப்படும் காலாவதியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகளால் சுகாதார சீர்கேடு

ஏரியில் கொட்டப்படும் காலாவதியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகளால் சுகாதார சீர்கேடு

மலைபோல் குவிந்துள்ள குப்பைகள் 

பூவிருந்தவல்லி அருகே உள்ள கண்ணார்பாளையம் ஏரியில் கொட்டப்படும் காலாவதியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பூவிருந்தவல்லி அருகே உள்ள கண்ணார்பாளையம் ஏரி ஏறக்குறைய 300க்கும் மேலான பரப்பளவை கொண்டது. இந்த ஏரி சமீப காலமாக முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் சேகரிக்கும் குப்பைகள் மொத்தமாக இந்த ஏரியில் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது ஏரியின் கரையோரம் பாக்கெட்டுகளில் ஐஸ்கிரீம்கள் கொட்டப்பட்டுள்ளன. முன்னணி நிறுவனத்தை சார்ந்த காலாவதியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகள் சட்டவிரோதமாக ஏரியில் கொட்டப்பட்டுள்ளன.

இதனை அங்கு சுற்றித்திரியும் கால்நடைகள் உண்ணுகின்றன. மேலும் ஐஸ்கிரீம்கள் திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ளதால் அதில் மழைநீர் கலந்து ஏரியின் நீரில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரியில் கொட்டப்பட்டுள்ள ஐஸ்கிரீம் பாக்கெட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஏரியை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஏரியை சுத்தமாக வைத்துக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story