திருவையாறில் சப்தஸ்தான விழா: பல்லக்குகள் புறப்பாடு

திருவையாறில் சப்தஸ்தான விழா: பல்லக்குகள் புறப்பாடு

பல்லாக்கு புறபாட்டில் கலந்து கொண்டவர்கள் 

திருவையாறில் சப்தஸ்தான விழாவை முன்னிட்டு பல்லக்குகள் புறப்பாடு நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்தஸ்தானம் என்கிற ஏழூர் வலம் வரும் விழாவையொட்டி பல்லக்குகள் புறப்பாடு வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இக்கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து நாள்தோறும் உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய வைபவமான சப்தஸ்தானம் என்கிற ஏழூர் வலம் வரும் விழா வியாழக்கிழமை காலை தொடங்கியது. இதில், திருவையாறு கிழக்குக் கோபுர வாசலில் ஐயாறப்பர் - அறம்வளர்த்த நாயகி பெரிய பல்லக்கிலும் (கண்ணாடிப் பல்லக்கு), நந்தியெம்பெருமாள் - சுயசாம்பிகை வெட்டிவேர் பல்லக்கிலும் எழுந்தருளினர்.

இதைத்தொடர்ந்து இரு பல்லக்குகளும் திருப்பழனத்துக்குச் சென்றன. அங்கிருந்து 3 பல்லக்குகள் சேர்ந்து புறப்பட்டு, திருச்சோற்றுத்துறைக்குச் சென்றடைந்தன. திருச்சோற்றுத்துறையில் இருந்து 4 பல்லக்குகளும் புறப்பட்டு திருவேதிக்குடிக்கு சென்றன. திருவேதிக்குடியிலிருந்து 5 பல்லக்குகளும் சேர்ந்து திருக்கண்டியூருக்கும், அங்கிருந்து 6 பல்லக்குகள் புறப்பட்டு திருப்பூந்துருத்திக்கும், திருப்பூந்துருத்தியிலிருந்து 7 பல்லக்குகள் புறப்பட்டு, திருநெய்த்தானம் என்கிற தில்லைஸ்தானம் காவிரியாற்றையும் சென்றடையும். இதன் பின்னர் இரவில் காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெறும். இதையடுத்து, தில்லைஸ்தான பல்லக்கு உள்பட 7 ஊர் பல்லக்குகளும் வெள்ளிக்கிழமை மாலை திருவையாறு தேரடி திடலை சென்றடையும். அங்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு பல்லக்குகள் ஒவ்வொன்றாகச் சொந்த ஊருக்குத் திரும்பும்.

Tags

Next Story